கோட்சே தான் முதல் தீவிரவாதி என கமல் விமர்சித்தது பரபரப்பை உருவாக்கியுள்ளது. பாஜக தலைவர்கள் கமலை கண்டித்துள்ளனர்.
"கொலைகாரனுக்கும் தீவிரவாதிக்கும் இடையேயான வித்தியாசம் கமல்ஹாசனுக்கு புரியவில்லை. மகாத்மா காந்தியின் படுகொலை வழக்கு விசாரணையை அவர் முழுமையாகப் படித்தால் அந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியும். சிறுபான்மையினரை கவர்வதற்காகவே கமல் அப்படி பேசியுள்ளார்" என தெரிவிக்கிறார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.
இதற்கு ஒரு படி மேலே சென்று கமலை கடுமையாக கண்டித்துள்ள சுப்பிரமணிய சாமி, "கோட்சே தீவிரவாதி கிடையாது. மகாத்மா காந்தியை கொலை செய்த கொலையாளி. அவ்வளவே. இந்து மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் கமல்ஹாசனின் கட்சியை தடை செய்ய வேண்டும்" என்கிறார்.
பாஜக தலைவர்களின் இத்தகைய கண்டணங்கள் கமலின் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைக்கிறது. பாஜக தலைவர்களின் கொடும்பாவியை எரித்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்ய மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் அனுமதி கேட்டதற்கு, "அவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்" என சொல்லி அனுமதி தர மறுத்துள்ளார்.