பா.ஜ.க. தலைவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சி அமைத்து நான்காண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஒருபுறம் எதிர்க்கட்சியினர் அவரது ஆட்சியில் உள்ள குறைபாடுகளை குற்றச்சாட்டுகளாக சுட்டிக்காட்டி வந்தாலும், பா.ஜ.க.வைச் சேர்ந்த பல தலைவர்கள் இந்த நான்காண்டு கால ஆட்சியை கொண்டாடி வருகின்றனர்.
முந்தைய காலங்களில் எதுவுமே நடக்காதது போல், அவர்கள் தங்களைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருப்பதாக ஆனந்த் சர்மா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ‘இந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா ஒன்றும் மிகப்பெரிய நாடாக வளர்ந்து விடவில்லை. ஆனால், இந்த நான்காண்டுகளுக்கு முன்பே இந்தியா ஒரு சிறந்த பொருளாதார சக்தியாக வளர்ந்திருந்தது. மோடி பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்பே இங்கு ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம்.கள் இருந்தன. அதனால், இந்த ஆட்சிக்கு முன்பு எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று அவர்கள் இனியும் சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்றால், அவர்களுக்கு மனநல ஆலோசனை தரப்பட வேண்டும் என்பதே என் கருத்தாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.