உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?.
நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார்.