ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற நாள் முதல் என்னை பணி செய்ய விடாமல் தடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் கொடுப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் தன் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் குடும்பத்தினருடன் சென்று மனு கொடுத்தார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு கெங்கநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார். இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் இன்று (மார்ச் 13ஆம் தேதி) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் முகாமிற்கு வருகை தந்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியனிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘அணைக்கட்டு ஒன்றிய திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் அணைக்கட்டு ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கெங்கநல்லூர் ஊராட்சியில் உள்ள ஓட்டேரியில் தூர் வாருகிறேன் என்று கூறி மண் அள்ளி விற்று வருகிறார்கள். அதை நான் தலைவர் என்ற முறையில் கேட்டதற்கு நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்தால் என்னை கேவலமாக மூன்றாம் தர வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி பதவியில் இருந்து எடுத்து விடுவேன் என மிரட்டுகிறார்கள்.
மேலும், அடியாட்களை வைத்து என்னை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். நான் தாழ்த்தப்பட்டவன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள். எனவே அரசு விதிகளை மீறி ஏரியில் மண் எடுக்கும் நபர்கள் மீதும் அரசின் பொது சொத்துகளை சேதப்படுத்தியதற்காகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீதும் அதற்கு காரணமாக இருந்த வெங்கடேசன், மகாலிங்கம், ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.’ என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.