Skip to main content

மீண்டும் உடைகிறது அதிமுக..? ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மோதல்..!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

ddd

 

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக, த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் என்றும், எந்தெந்த தொகுதிகள் என்றும் ஒதுக்கிவருகிறது அதிமுக. 

 

இதனிடையே திடீரென கடந்த வாரம் அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியில் எஸ்.தேன்மொழி போட்டியிடுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

 

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அதிமுகவில் ஓ.பி.எஸ். மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்கியிருக்கிறார். 

 

தென் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை நான்தான் தேர்ந்தெடுப்பேன். வடமாவட்டத்திலும் கொங்கு மண்டலத்திலும் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களில் பாதி பேர் என்னுடைய ஆட்களாகத்தான் இருக்கவேண்டும் எனக் கடுமையான நிபந்தனைகளை ஓ.பி.எஸ். முன்வைத்திருக்கிறார். 

 

இல்லையென்றால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விண்ணப்பப் படிவத்தில் நான் கையெழுத்துப் போடமாட்டேன் எனப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ஓ.பி.எஸ்ஸின் இந்தப் பதிலை அறிந்து இ.பி.எஸ், 'இப்படியெல்லாமா பேசுகிறாரா அவர்' என வருத்தப்பட்டுள்ளார். மேலும் வழக்கம்போல ஓ.பி.எஸ்.ஸை சமாதானப்படுத்த தூதுவர்களை அனுப்பி எடப்பாடி பழனிசாமி சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்.

 

ddd

 

இன்று இரவு 8 மணிக்குள் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்திருந்தது. ஓ.பி.எஸ்.க்கு பாதி, இ.பி.எஸ்க்கு பாதி என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. ஆனால், இப்பொழுது ஓ.பி.எஸ்., நான்தான் ஒருங்கிணைப்பாளர் எனக்கு 75 வேட்பாளர்கள், முதல்வர் வேட்பாளராகிய உங்களுக்கு 25 வேட்பாளர்கள் என்று சொல்லியிருக்கிறார். ஓ.பி.எஸ்.ஸின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிமுக உடையும் என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.  

 

 

சார்ந்த செய்திகள்