ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா ரெட்டியை தெலங்கானா போலிசார் காரோடு சேர்த்து இழுத்துச் சென்ற காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா ரெட்டி கடந்தாண்டு ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற கட்சியைத் துவங்கினார். ஹைதராபாத்தில் இருந்து அரசியலில் தீவிரமாக பங்கேற்கும் ஷர்மிளா ரெட்டி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை தீவிரமாக விமர்சித்து வருகிறார்.
ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சியை எதிர்த்து விமர்சித்து ஷர்மிளா நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நடைபயணத்தின் போது அவரது கட்சிக்காரர்களுக்கும் சந்திரசேகர் ராவ் கட்சிக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு நியாயம் கேட்டு சந்திரசேகர் ராவின் இல்லத்திற்கு காரில் புறப்பட்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். மீண்டும் திரும்பிச் செல்லும்படி அறிவுறுத்தினர்.
இதனை ஷர்மிளா கேட்காததால் காவல்துறையினர் அவரை கைது செய்ய முயன்றனர். ஆனால், ஷர்மிளா காரை விட்டு இறங்க மறுத்ததால் கிரேனை கொண்டுவந்து காரை கிரேனுடன் டோ செய்து காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது காருக்குப் பின்னால் ஓடியபடியே சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனையறிந்த ஷர்மிளாவின் தாயார் மகளைப் பார்க்க காவல்நிலையத்திற்குப் புறப்பட்டார். அவரை வெளியில் விடாமல் காவலர்கள் தடுத்து வீட்டுக்காவலில் வைத்தனர்.
ஷர்மிளா ரெட்டி காருடன் காவல்நிலையம் செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.