Skip to main content

திறந்த வாசலை மூடிவிட்டு மூடிய வாசலில் முட்டும் பா.ஜ.க.! - கலாய்க்கும் சந்திரபாபு

Published on 30/05/2018 | Edited on 30/05/2018

ஏற்கெனவே திறந்துகிடந்த வாசலை மூடிவிட்டு, மூடிய கதவில் முட்டிக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
 

ChandraBabu

 

கொடுத்திருந்த வாக்குகளை நிறைவேற்றத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, கடந்த மார்ச் மாதம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. அதைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் மோடி அரசு குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார். பா.ஜ.க.வை முகவரி இல்லாமல் செய்துவிடுவேன் என வெளிப்படையாகவே அறிவித்தார். மேலும், வரும் 2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியைத் தழுவும் எனவும் சமீபத்தில் பேசியிருந்தார். 
 

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் மூன்று நாள் மாநாடு நிறைவடைந்ததை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர், ‘பா.ஜ.க. கர்நாடக மாநிலத்தை தென்னிந்திய நுழைவுவாயில் என சொல்லிக் கொண்டிருக்கிறது. அதைக் கைப்பற்றுவதற்காக ஏராளமான வித்தைகளைக் கையாண்டு தோற்றுவிட்டது. எனக்கு என்ன புரியவில்லை என்றால், ஏற்கெனவே திறந்துகிடந்த ஆந்திரப்பிரதேசம் எனும் தென்னிந்திய நுழைவுவாயிலை எதற்காக இப்படி இழுத்து மூடிவிட்டார்கள் என்பதுதான்’ என பேசியுள்ளார். மேலும், மோடி கடந்த நான்கு ஆண்டுகளில் நண்பர்களை விட எதிரிகளையே அதிகம் சம்பாதித்திருக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்