Skip to main content

காட்டிக் கொடுத்த ஸ்டாலினுக்கு இதுபற்றி பேச அருகதை இல்லை... அன்புமணி ராமதாஸ்

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சேலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி மக்களிடம் ஆலோசனை நடத்தி, அவர்களின் ஒப்புதலைப் பெற்று  சென்னை&  சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறார். மக்கள் நலனுக்கு எதிரான இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடில்லை. இத்திட்டம் பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ள கருத்துகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

 

 mkStalin


 

சென்னைக்கும் சேலத்திற்கும் இடையே ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில், புதிதாக 8 வழிச்சாலை தேவையில்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இந்த திட்டத்திற்காக 7000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும்; 10,000 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் தான் அத்திட்டத்தை பா.ம.க. தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. இந்த காரணத்திற்காகத் தான் பாதிக்கப்படவுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டு அதனடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் தான் 8 வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். போராடிப் பெற்ற இந்தத் தீர்ப்பின் மூலம் 5 மாவட்ட உழவர்களையும் பாமக பாதுகாக்கும்; ஒருபோதும் 8 வழிச்சாலை அமைக்கப்படாது.

 

சேலம் கூட்டத்தில் பேசிய நிதின்கட்கரி மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் என்ற அடிப்படையில் தான் 8 வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். தமிழக மக்களிடையே அத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருவதை அவர் உணர்ந்திருக்கவில்லை. அவர் கூறிவிட்டார் என்பதாலேயே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவிடாது. அதுமட்டுமின்றி, 8 வழிச்சாலைத் திட்டம் குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை அரசு செயல்படுத்தும்; அது அரசின் கடமை என்று முதலமைச்சர் கூறியுள்ளார். மாநில அரசின் ஒத்துழைப்பும், ஆதரவும் இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவது சாத்தியமல்ல.

 

மேலும், 8 வழிச்சாலைத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கி அது தேவையில்லை என்பதை நிதின் கட்கரிக்கு புரிய வைப்போம். வாணியம்பாடியிலிருந்து சேலம் செல்லும் 179&ஏ எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் ரூ.515 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் 8 வழிச்சாலைக்கு தேவை இருக்காது என்பதால்  இத்திட்டம் தேவையில்லை என்பதை நிதின்கட்கரியிடம் எடுத்துக் கூறி திட்டத்தை கைவிட வைப்போம்.

 

இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், நிதின்கட்கரியின் அறிவிப்பை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மேடையிலேயே தடுத்து நிறுத்தாதது ஏன்? என்று கூறி வழக்கம் போலவே தடித்த வார்த்தைகளில் விமர்சித்துள்ளார். ஒரு மேடையில் ஒரு கட்சியின் தலைவர் பேசும் போது அதில் குறுக்கிடாமல் இருப்பது தான் மேடை நாகரிகமாகும். இந்தியாவில் எங்கும் ஒரு கட்சித் தலைவரின் பேச்சை இன்னொரு கட்சித் தலைவர் தடுத்து நிறுத்துவது நடக்காது.


 

ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த இராஜபக்சேவை சந்தித்து, எமது சொந்தங்களை இனப் படுகொலை செய்தது ஏன்? என்று கேள்வி கேட்காமல், மேடை நாகரிகம் என்ற பெயரில் அவர் கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பெட்டியை பல்லிளித்துக் கொண்டே வாங்கி வந்த திமுக& காங்கிரஸ் கூட்டணிக்கு இதுபற்றி பேச தகுதி இல்லை. ஸ்டாலினின் தோல்வி பயம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தோல்விக்கடலில் தத்தளிக்கும் அவர், ஏதாவது துரும்பு கிடைக்காதா? அதைப் பிடித்து கரையேறிவிட முடியாதா? என்று துடித்துக் கொண்டுள்ளார். 8 வழிச் சாலைத் திட்டத்தில் உழவர்களைக் காட்டிக் கொடுத்த ஸ்டாலினுக்கு இதுபற்றி பேச அருகதை இல்லை.

 

சென்னை & சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்தை தடுத்து நிறுத்தவும், அதனால் பாதிக்கப்படும் உழவர்கள் நலனை பாதுகாக்கவும் மு.க.ஸ்டாலின் இதுவரை செய்தது என்ன? சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும்,‘‘தமிழகத்தின் வளர்ச்சிக்கு 8 வழிச்சாலைத் திட்டம் மிகவும் அவசியம். அந்தத் திட்டத்தை வரவேற்கிறேன்’’ என்று கூறி உழவர்களுக்கு துரோகம் செய்தவர் தான் ஸ்டாலின்.

 

8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து ஏதேனும் ஒரு முறையாவது ஸ்டாலின் போராட்டம் நடத்தியிருப்பாரா? ஒரு முறையாவது மக்களைச் சந்தித்து கருத்துக் கேட்டிருப்பாரா? வழக்குத் தொடர்ந்திருப்பாரா? போராடும் மக்களுக்கு தார்மீக ஆதரவையாவது தெரிவித்திருப்பாரா? இப்படி எதையுமே செய்யாத ஸ்டாலினுக்கு இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு எந்தவித தகுதியும், அருகதையும் கிடையாது.


 

anbumani ramadoss



மு.க.ஸ்டாலினால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட ராகுல் காந்தி, கர்நாடகத்திற்கு சென்று தமிழகத்திற்கு எதிராக விஷம் கக்கி வருவது ஸ்டாலினுக்கு தெரியாதா? மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று ராகுல் கூறுகிறார். ஸ்டாலினுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்திருந்தால் ராகுல் காந்தியை கண்டித்திருக்க வேண்டும். அதை அவர் செய்தாரா? தமிழ்நாட்டு உழவர்களுக்கும் ஸ்டாலின் எதையும் செய்ய மாட்டார்; தமிழக உழவர்களுக்கு எதிராக பேசும் ராகுல் காந்தியையும் கண்டிக்க மாட்டார். ஆனால், தமிழகத்தில் சட்டப்போராட்டமும், அரசியல் போராட்டமும் நடத்தி நீதி பெற்றுத் தந்த பா.ம.க.வை மட்டும் ஸ்டாலின் விமர்சிப்பாராம். ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டத்தின் நாடகங்களை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.

 

திமுக எப்போதும் உழவர்கள் நலனுக்கு எதிரானது. அதனால் தான் துணை நகரத் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு அருகில் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களைப் பறித்து, 13 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்றத் துடித்தது. ஆனால், அதை மருத்துவர் அய்யா அவர்கள் தான் போராட்டம் நடத்தித் தடுத்தார். அதைப் போலவே, 8 வழிச்சாலைத் திட்டத்தையும் தடுத்து, 5 மாவட்ட விவசாயிகளின் நலன்களை மருத்துவர் அய்யாவும், நானும் பாதுகாப்போம். எனவே, உழவர்கள் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்