தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் கொடுத்திருந்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்திருந்தது. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு தற்போது வரை ஆளுநர் பதிலளிக்காததால் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதேநேரத்தில் சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தில் பங்கேற்றன.
'தமிழக அரசு ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தில் பங்கேற்காததால் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம்' என இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவிக்க, இந்த விவகாரம் சூடுபிடித்தது. அண்ணாமலையின் கருத்துக்கு விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் 'டீ செலவு மிச்சமா? டீசல் செலவு மிச்சம்' எனப் பதிலளித்திருந்தார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் அண்ணாமலையின் விமர்சனம் குறித்து டிவிட்டரில் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசு ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது தவறல்ல என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ''தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறிப்பாக மேகதாது அணை பிரச்சனை, காவேரி பிரச்சனையாக இருக்கட்டும் இதுபோன்ற சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றும் மசோதாக்களை ஆளுநர் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டியது அவருடைய கடமை என்று நாங்கள் நினைக்கிறோம். திமுக வெளிநடப்பு செய்யும் பிறகு கவர்னரை சென்று பார்ப்பார்கள் அது வேற விஷயம். ஆனால் கவர்னர் மாநில அரசுக்கு தேவையானதை மத்திய அரசிடம் பெற்றுத்தருவதற்கான செயலைச் செய்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.