இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாவில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமித்ஷா, “தமிழர்களின் தொன்மையான செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தது பிரதமர் மோடி தான். உலகின் எந்த நாட்டுக்கு பிரதமர் போனாலும் தமிழின் தொன்மையையும் பேசி வருகிறார். சமீபத்தில் காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்தி நமக்கும் அவர்களுக்கும் உள்ள உறவை பிரதமர் உரக்கக் கூறியுள்ளார். தமிழுக்காக வாழ்வதாக சொல்லும் திமுக பத்தாண்டு கால மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஆட்சியில் இருந்தார்கள். அதற்கு முன்பு 8 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். அப்போது சிஆர்பிஎஃப், சிவில் சர்வீஸ் தேர்வுகளை தமிழ் மக்கள் தமிழ் மொழியில் எழுத முடியாத நிலை இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் தான் சிஆர்பிஎஃப், சிவில் சர்வீஸ் தேர்வுகளை தமிழக மக்கள் தமிழ் மொழியில் எழுத முடிகிறது.
சீன அதிபர் எங்கும் செல்ல மாட்டார். அவர் இந்தியாவிற்கு வருவதாக சொன்ன போது பிரதமர் அவரை தமிழ்நாட்டிலுள்ள மகாபலிபுரத்துக்கு அழைத்து வந்தார். தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் என்னைப் பார்த்து கேள்வி கேட்கிறார். 9 ஆண்டுகள் நரேந்திர மோடி ஆட்சியில் என்ன செய்தோம் என்று பட்டியல் போடுமாறு கேட்கிறார். 2004ல் இருந்து 2014 வரை தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தது. உங்கள் அமைச்சர்கள் இருந்தார்கள். பத்தாண்டுகளில் தமிழகத்துக்கு கிடைத்த பங்களிப்பு தொகை 95 ஆயிரம் கோடி. ஆனால் 9 ஆண்டுகளில் நரேந்திர மோடி 2 லட்சத்து 47 ஆயிரம் கோடியை தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ளார்.
காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்த போது 58 ஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் பாஜக அரசு பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் 2 லட்சத்து 31 ஆயிரம் கோடியை மானியமாக கொடுத்துள்ளார். 3 ஆவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் அமையவுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாஜகவிற்கு 25 தொகுதிகளை வென்று தர வேண்டும்” என்றார்.