பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதுவரை, கவர்னர் நியமிக்கும் மூன்று பேர் கொண்ட தேடுதல் குழுவின் பரிந்துரையின் பேரில் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுவந்த நிலையில், இந்த மசோதா அதனை மாற்ற வழிவகை செய்யும். இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்யமுடியும்.
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. பின்னர், இந்த சட்டமசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றுவந்த நிலையில், அதிமுகவும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
சட்டமன்றத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக சார்பாக மாண்புமிகு உறுப்பினர் கோவிந்தசாமி பேச முயற்சித்தபோது அமைச்சர் பெரியகருப்பன் மரியாதை குறைவாக உட்காருடா என்ற வார்த்தையில் பேசிய காரணத்தால் அவரது பேச்சைக் கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்தது" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, "மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் மரியாதை குறைவாக பேசிய காரணத்தாலும், அவையில் இருந்த முதலமைச்சர் அவரைக் கட்டுப்படுத்தாமல் அதை ஆதரிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த காரணத்தாலும் நாங்கள் வெளிநடப்பு செய்தோம்" எனத் தெரிவித்தார்.