பொதுப்பணித்துறை காண்ட்ராக்டுகளை தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவுகள் வருவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி கோட்டை வட்டாரத்திலேயே ஹாட் டாக் அடிபடுகிறது என்கின்றனர். அண்மையில் லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காவிரி ஆற்றைத் தூர்வாரும் பணிக்கான டெண்டர் விடப்பட்டதாக கூறுகின்றனர். அது தி.மு.க. எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியனின் தொகுதி என்ற போதும் அ.தி.மு.க.வினருக்கே டெண்டர் கொடுக்க வேண்டும் என்று கோட்டையில் இருந்து முதலில் உத்தரவு போயிருப்பதாக சொல்லப்படுகிறது.
பிறகு, அங்கே முக்குலத்தோர், முத்தரையர் சமூகத்தினர் அதிகம். அதனால் அவர்களுக்கு டெண்டரைக் கொடுத்துவிடாமல் தனது சமூகத்தினராகப் பார்த்து டெண்டரைத் தரவேண்டும் என்று முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் இருந்தே அடுத்த உத்தரவு சென்றுள்ளதாக சொல்கின்றனர். இதேபோல் தமிழகம் முழுக்க டெண்டர் விவகாரங்களில் தன் சமுதாய லாபியைக் கொண்டுவர முதல்வர் எடப்பாடி நினைக்கிறார் என்கிறது கோட்டை வட்டாரம். இதனால் அதிமுகவில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் ஓபிஎஸ் தரப்பு சற்று அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.