Published on 28/08/2019 | Edited on 28/08/2019
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 25-ம் தேதி (ஞாயிறு) மாலை இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த அம்பேத்கரின் முழு உருவ சிலை சேதப்படுத்தப்பட்டது. அப்போது இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்ட நிலையில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் பதற்றமான சூழல் உருவானது. சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 28 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ராமநாதபுரம் கலெக்டரை சந்திக்க கருணாஸ் வரும் போது இடுப்பில் துப்பாக்கி வைத்திருந்ததை பார்த்து போலீஸார் மற்றும் அங்கு இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்பு இது பற்றி விசாரித்த போது, நடிகரும் திருவாடானை தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த பள்ளி விழாவில் கலெக்டரையும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க வந்ததாக கருணாஸ் தெரிவித்துள்ளார். மேலும் கருணாஸிடம் துப்பாக்கி வைத்து கொள்ள லைசென்ஸ் இருப்பதால் அவர் எப்போதும் துப்பாக்கியுடன் தான் இருப்பார் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர். அவர் எப்போதும் காரில் தான் துப்பாக்கி வைத்திருப்பார். சமீபத்தில் வேதாரண்யம் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகிய நிலையில், அவருடைய பாதுகாப்புக்காக துப்பாக்கியை இடுப்பில் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.