தமிழகத்தில் மட்டுமே சிறு வணிகர்களை மிரட்டி உரிமம் பெற வைக்கும் நடைமுறை உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை அவினாசி சாலையிலுள்ள தென்னிந்திய வர்த்தக சபை கூட்டரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. அதன் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருகிற மே 5 ம் தேதி சென்னையில் நடைபெறும் 35 வது வணிகர் தின மாநாட்டிற்கு கோவையில் இருந்து 500 வாகனங்களில் செல்வது ,வரும் 31 ஆம் தேதிக்குள் அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் எல்லா உதவிகளையும் செய்வது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் ஜி எஸ் டி யிலிருந்து முழு வரி விலக்கு அளிக்க வேண்டும்,பெட்ரோல்- டீசல் உள்ளிட்டவற்றை ஜி எஸ் டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பன போன்ற 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதன் மாநில தலைவர் விக்கிரமராஜா, அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை வணிகர்கள் மீது திணிப்பது கண்டிக்கதக்கது என்றார். சிறு வணிகர்களை பல இடங்களில் மிரட்டியே உரிமம் பெற வைத்ததாகவும் தமிழகத்தில் மட்டும் தான் இந்த நெருக்கடி இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.மேலும் கரப்பான் பூச்சி கடையில் இருந்தால் 5000 ரூபாய் அபராதம் எலி இருந்தால் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன் குடிநீரில் கலப்படம் உள்ளதை யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் அதற்காக அந்த அதிகாரிகளையும் துறை அமைச்சரையும் சிறையில் அடைக்கலாமா எனவும் கேள்வி எழுப்பினார். தாங்கள் பொருட்களை வாங்கி விற்பவர்கள் மட்டுமே என்றும் கலப்பட பொருள் விற்பனை என்ற பெயரில் தங்களை தண்டிப்பது தவறு என்றும் கேட்டுக்கொண்ட அவர், உற்பத்தி செய்யக்கூடிய இடத்தில் தான் பிரச்சினை உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
தமிழக அரசியலில் புதிதாக ஈடுபட்டுள்ள ரஜினியாக இருந்தாலும் கமலாக இருந்தாலும் தமிழகத்தில் உள்ள ஆறுகளை சீர் செய்ய வேண்டும் என்றும் எந்த அரசாக இருந்தாலும் தமிழக அரசு நதி நீர் விஷயத்தில் நமது உரிமைகளை விட்டு கொடுக்க கூடாது என்றும் வலியுறுத்தினார். இதேபோல் தமிழக அரசு உரிமைகளுக்காக அனைத்து கட்சிகளையும் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு எப்போதும் அதற்கு துணை நிற்கும் என்றும் விக்கிரமராஜா உறுதியளித்தார்.