
தம்பி, காதலி, பாட்டி என குடும்பத்தில் உள்ள 5 பேரை வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாரமூடு அருகே பேருமலை பகுதியைச் சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி ஷெமி. இந்த தம்பதியினருக்கு அஃபான் (23) மற்றும் அப்சான் (15) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று (24-02-25) இரவு அஃபான், வெஞ்ஞாரமூடு காவல் நிலையத்திற்கு வந்து, தான் தன்னுடைய தாய், தம்பி, தந்தையின் சகோதரர், அவருடைய மனைவி, பாட்டி மற்றும் காதலி ஆகிய 6 பேரை கொலை செய்ததாகக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அஃபானை கைது செய்தனர். மேலும், கொலை செய்ததாகக் கூறப்பட்ட இடத்தில் போலீசார் சென்று பார்த்துள்ளனர். அங்கு, 6 பேரை கொடூரமாகத் தாக்கப்பட்டு, 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, கொலை செய்யப்பட்டு கிடந்த 5 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வேலைக்காக துபாய் சென்ற அஃபான் அங்கு வேலை கிடைக்காததால் சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த பர்சானா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலி பர்சானாவை உறவினர்கள் ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம் போல் தன்னுடைய காதலி பர்சானாவை நேற்று மாலை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது தன்னுடைய தாய் ஷெமி, தம்பி அப்சான் மற்றும் காதலி பர்சானாவை சுத்தியால் சரமாரியாக அடித்துள்ளார். இதனையடுத்து அருகில் உள்ள பாங்கோடு என்ற இடத்தில் வசிக்கும் தன்னுடைய பாட்டி சல்மா பீவியை (88) சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார். அதன் பின்னர், அருகில் உள்ள சுள்ளால் பகுதிக்கு வந்து தன்னுடைய பெரியப்பா லத்தீப் (63) மற்றும் அவரது மனைவி ஷாகினா (53) ஆகியோரையும் சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த கொடூரச் சம்பவத்தில் அஃபானின் தாய் ஷெமி தவிர 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது.
ஆபத்தான நிலையில் உள்ள ஷெமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, தான் விஷம் சாப்பிட்டதாக அஃபான் கூறியதையடுத்து அவரை உடனடியாக போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அஃபான் சிகிச்சை பெற்று வருவதால், கொலைக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.