Skip to main content

“தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும்” - புதுச்சேரியிலும் வெடித்த போராட்டம் 

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

struggle against Tamil Nadu Governor RN Ravi in Puducherry too

 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றிய பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும்போதே  ஆளுநர் ஆர்.என்.ரவி சபையிலிருந்து வெளியேறிச் சென்ற செயலுக்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

 

இந்த நிலையில் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காமராஜர் சிலை முன்பு ஒன்று கூடிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ரவியின் உருவப் படத்தைக் காலணியால் அடித்தும், அவருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

struggle against Tamil Nadu Governor RN Ravi in Puducherry too

 

போராட்டம் காமராஜர் சிலை அருகே நடந்துகொண்டிருக்க, அரவிந்தர் வீதி அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போராட்டக்காரர்கள் ஆளுநர் ரவியின் உருவ பொம்மையை எரித்து ரோட்டில் இழுத்து வந்தனர். இதனை அறிந்த போலீசார் அவர்களை நோக்கி ஓடி உருவ பொம்மையைப் பிடுங்க முயன்றனர். அப்போது போராட்டக்காரர்கள் அதையும் மீறி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆர்.என்.ரவியின் உருவ பொம்மையை ரோட்டில் தர தர என்று இழுத்துச் சென்றதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இதனையடுத்து உருவ பொம்மையைப் பிடுங்கி அப்புறப்படுத்திய போலீசார் நூற்றுக்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை கைது செய்தனர். இது குறித்து இயக்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் இளங்கோவன் கூறும்பொழுது, “தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராகப் பேசி வரும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ், ஆர்.என்.ரவி உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்