இந்தோனேசியாவில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்று வரும் பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் உயரதிகாரிகள் நேரில் சந்தித்துப் பேசினர்.
இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை மாநாடு நிகழ்ச்சிகளுக்கு பிறகு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்துப் பேசி வருகின்றனர்.
நேற்று (15/11/2022) செனகல் அதிபர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதேபோல், உலக வங்கியின் தலைவர், பன்னாட்டு நிதியத்தின் கீதா கோபிநாத் மற்றும் ஜார்ஜியாவோ ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினர். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசிய நிலையில், புகைப்படத்துடன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடல் அரிப்பை தடுப்பது, கரியமில வாயுக்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் அலையாத்தி காடுகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக அந்தக் காடுகளை உலக நாடுகள் பராமரித்து, அழிவில் இருந்து தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில், அலையாத்தி காடுகளை உலக நாடுகளின் தலைவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பாலி தீவில் உள்ள அலையாத்தி காடுகளைப் பார்வையிட்டனர்.
தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட போது அரணாக இருந்து பாதிப்பைத் தடுத்ததில் அலையாத்தி காடுகள் முக்கியப்பங்கை வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.