அண்மைக்காலமாக டிக் டாக் செயலியின் மூலம் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள் சம்பந்தமாக பல்வேறு செய்திகள், சம்பவங்கள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கின்ற சூழலில் கிராபிக்ஸ் மூலம் ஆண் வேடமிட்ட பெண்ணை நம்பி கணவனை மனைவி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வசித்து வந்த ரவிகுமார் என்பவரின் மனைவி அர்ச்சனா, இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் 2 மகன்கள் உள்ளனர். இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளின் தாயான அர்ச்சனா பெங்களூரில் பணிபுரியும் அவரது சகோதரியின் தோழியான அஞ்சலி என்பவருடன் டிக்டாக்கில் அறிமுகமாகியுள்ளார்.
இவர்கள் இருவரும் டூயட் பாடல்களுக்கு ஒருவருக்கொருவர் வீடியோக்கள் வெளியீட்டு பழகி வந்துள்ளனர். அதில் அஞ்சலி கிராபிக்ஸ் மூலம் ஆண் போன்ற சிகை அலங்காரங்கள் செய்து கொண்டு அர்ச்சனாவிற்கு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்த நட்பானது அர்ச்சனாவை தேடி அவர் வீட்டுக்கு அஞ்சலி வரும் அளவிற்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது. அப்படி வீட்டுக்கு வந்த டிக் டாக் நண்பரான அஞ்சலி அர்ச்சனாவின் வீட்டிலேயே ஒரு வாரத்திற்கு மேல் தங்கியதாக கூறப்படுகின்றது.
அதேபோல் அவர் தன்னை ஒரு ஆண் போல காட்டிக்கொண்டு கிராபிக்ஸ் மூலம் மீசை தாடி போன்றவற்றைச் செய்து கொண்டு அர்ச்சனாவை மயக்கி காதல் வலையில் வீழ்த்த்தியுள்ளார் அஞ்சலி. இந்த தொடர்பு ஒரு கட்டத்தில் எல்லை மீறியதால் இதை தெரிந்துகொண்ட அர்ச்சனாவின் கணவன் ரவிக்குமார் இனி நீங்கள் இருவரும் சந்திக்கவோ, போனில் பேசிக் கொள்ளவோ கூடாது என கடுமையாக கண்டித்துள்ளார்.
மேலும் அர்ச்சனா கையில் உள்ள ஸ்மார்ட் போனையும் பிடுங்கி வைத்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட அந்த கிராஃபிக்ஸ் ஆண் அஞ்சலி அர்ச்சனாவுக்கு புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை ரகசியமாக வாங்கி கொடுத்து தொடர்ந்து இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். இதனை மீண்டும் கண்டுபிடித்துக் கொண்ட கணவன் ரவிக்குமார் மனைவி அர்ச்சனாவை மிகக் கடுமையாக கண்டித்துள்ளார். இந்த பிரச்சனையால் கணவரை விட்டு தாய் வீட்டிற்கு அர்ச்சனா சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
தாய் வீட்டிற்கு வந்த அர்ச்சனா அங்கு வைத்தும் அஞ்சலியுடன் டிக் டாக் வீடியோக்கள் செய்து வெளியிட்டுள்ளார். சம்பவங்கள் இப்படி நடந்து கொண்டிருந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அர்ச்சனா அஞ்சலியை தேடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அர்ச்சனாவும் இரண்டு குழந்தைகளும் எங்கே உள்ளனர் எனத் தெரியாது தவித்த அர்ச்சனாவின் வீட்டார் இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க தற்போது போலீசார் அர்ச்சனா அவரது குழந்தைகள் இருவர் மேலும் அஞ்சலி ஆகிய நால்வரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
டிக்டாக் மூலம் எவ்வளவோ கலாச்சார சீரழிவு பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் ஆண் போல கிராபிக்ஸ் வேடமிட்ட பெண்ணை தேடி பெண் சென்ற சம்பவம் சற்று வினோதத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. என்றுதான் தீருமோ இந்த டிக் டாக் மோகம்.