தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் புதுச்சேரி, அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார். திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிலையினைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், "கலைஞர் தனது அறிவால், ஆற்றலால், தியாகத்தால், உழைப்பால் தமிழக முதல்வராகி இந்திய அரசியலுக்கு ஆற்றியுள்ள பங்குகள் ஏராளம். அவர் இந்தியாவின் இறையாண்மையை காப்பாற்றினார். இந்தியாவில் சமதர்மத்தை வங்கிகளில் கொண்டு வந்தார். அகில இந்திய அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் கலைஞரின் பங்கு அதிகம் இருந்தது. டாக்டர் அம்பேத்கர் தனது 23 வயதில் சாதியைப் பற்றி பெரிய ஆய்வு செய்த புத்தகம் ஒன்று எழுதினார். இந்த புத்தகம் இந்து மதத்திற்கு எதிராக உள்ளது என்றும், எங்கள் சாதி எங்களுக்கு வேண்டுமென்றும் கூறி லண்டனில் இருந்த உச்ச நீதிமன்றத்தில் அந்த புத்தகத்துக்கு தடை வாங்கினார்கள். தடை செய்யப்பட்ட அந்த புத்தகத்தை கொண்டு வந்து பாரதிதாசன் முழங்கிய சமத்துவ மண் இந்த புதுச்சேரி. இந்து மதத்தால் அனைத்து சாதியினருக்கும் இழிவு இருந்தது. எல்லாவற்றையும் எதிர்த்து தாண்டி வந்துள்ளோம். சனாதனம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நான் புதுச்சேரியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சவால் விடுகிறேன். அமித்ஷா அல்லது பாஜகவில் எவ்வளவு பெரியவர்கள் ஆக இருந்தாலும் வாருங்கள். டெல்லியில் திறந்தவெளியில் விவாதிப்போம். நாங்கள் சனாதனம் வேண்டாம் என்று போராடியதால் தான் தமிழிசை ஆளுநர், வானதி சீனிவாசன் வழக்கறிஞர், அண்ணாமலை ஐ.பி.எஸ் ஆனார்கள். நாங்கள் ஒழித்த சனாதனத்தால் வந்து உட்கார்ந்து கொண்டு சனாதனம் பேசுகின்றவர்களுக்கு மனசாட்சி இல்லையா? நான் வெளிப்படையாக சொல்கிறேன். மோடியை விட அமித்ஷாவை விட, பா.ஜ.கவில் உள்ள அனைத்து அமைச்சர்களைவிட, ஆர்.எஸ்.எஸ்ஸில் இருப்பவர்களை விட வெள்ளையர்கள் நாணயமானவர்கள். மனிதனுக்கு மனிதன் பாவம் செய்துவிட்டதாக இங்கிலாந்து பிரதமர், போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்கின்றனர். ஆனால் மணிப்பூரில் பலரை கொன்றுவிட்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் பெண்களை ஆடை இல்லாமல் அழைத்துச் சென்று காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்டுள்ளனர். இதனை நியாயப்படுத்தும் அங்குள்ள முதல்வரை நாடாளுமன்றத்தில் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பாராட்டுகின்றனர்" என்றார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திராசன் கூறும்போது, " ஆ.ராசா போன்றவர்கள் சனாதனத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். சனாதன ஒழிப்பு மூலம் சாதியை ஒழிப்பதாக கூறும் சூழலில் ராசாவால் ஏன் அவரது கட்சியின் தலைவராக முடியவில்லை? அங்கு அவர் முதல்வராகி விடுவாரா? உதயநிதிக்கு கிடைக்கும் அங்கீகாரம் அக்கட்சியில் உள்ள மற்றவர்களுக்கு தருவார்களா?
கருவறைக்குள் நீங்கள் செல்ல முடியுமா என்று டிவிட்டரில் என்னிடம் கேட்கிறார்கள். சில பழக்க வழக்கங்கள் மதங்களில் நடைமுறையில் உள்ளன. மேல்மருவத்தூரில் செல்ல முடியும். இதர கோயில்கள் பூஜை செய்பவர்கள் மட்டுமே செல்ல முடியும். மற்ற மதங்களில் மதம் சார்ந்த கலாச்சாரங்களை பழக்க வழக்கங்களை பின்பற்றும்போது விமர்சிக்காதவர்கள் இந்து மதத்தை மட்டும் ஏன் விமர்சிக்கிறார்கள்?.
சனாதனம் குறித்து தவறான கருத்தை முன் நிறுத்துகின்றனர். சமதர்ம சமுதாயம் தான் சனாதனம். ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறை தான் சனாதனம். சனாதனம் என்றால் சாதி மட்டும்தான் என்று சொல்கின்றனர். சாதி ஒழிக்க வேண்டும் என்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதி ரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள். தொகுதி தராதீர்கள். திமுகவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஏன் முதலமைச்சர் பதவி தர மறுக்கிறீர்கள்? அவர்கள் இயக்கத்திலேயே ஒரே குடும்பத்தை தாண்டி முக்கியத்துவம் பெற முடியாது.
நான், அண்ணாமலை போன்றவர்கள் பொது வெளியில் இருந்து கஷ்டப்பட்டு வந்துள்ளோம். அதற்கும் அவர் கூறும் விஷயத்துக்கும் சம்பந்தமில்லை. சனாதனத்தை எதிர்த்து பேசுவதால் திமுகவில் அவரால் உயர் பதவிக்கு வந்து விட முடியுமா? சனாதனத்தை எதிர்ப்பவர்கள் முதலில் உங்கள் கட்சியில் உள்ள சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும்" என்றார்.