தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் ஆறு கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (26/04/2021) 34 சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஏழாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. ஏழாம் கட்ட வாக்குப்பதிவில் 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் உயிரிழந்ததால், அந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
37 பெண்கள் உட்பட 268 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்; 86.78 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். ஏழாம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் அமைக்கப்பட்ட 11,376 வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது வாக்குகளைப் பதிவுசெய்து வருகின்றனர். கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர், மாநில காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் எட்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.