2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. இந்தநிலையில் நேற்று (12.02.2021) மாநிலங்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கு, மக்களவையில் இன்று நிர்மலா சீதாராமன் இன்று பதிலளித்தார். அப்போது அவர், தாங்கள் பெரு முதலாளிகளுக்காக வேலை செய்வதில்லை. மக்களுக்காகத்தான் வேலை செய்கிறோம் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், "மத்திய பட்ஜெட், இந்தியா சுயசார்பாக மாற வேகத்தை நிர்ணயித்துள்ளது. கரோனா தொற்றுநோயின் சவால்கள், நாட்டின் நீண்டகால இலக்குகளைப் பேணுவதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலிருந்து அரசாங்கத்தைத் தடுக்கவில்லை. இந்தச் சீர்திருத்தங்கள் இந்தியாவை உலகின் சிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றுவதற்கான பாதையை அமைக்கும். நாங்கள் பெருமுதலாளிகளுக்காக வேலை செய்யவில்லை, பொது மக்களுக்காகத்தான் வேலை செய்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.