கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பல்வேறு மாநில அரசுகளும், வல்லுனர்களும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.அதில் "அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதிப்படுத்த மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பதுக்கலைத் தடுத்து நியாயமான விலையில் மக்களுக்குப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலம் நீட்டிக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மத்திய அரசின் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.