தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. அதேபோல் அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 294 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், நான்கு கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 45 சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 17- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளால் மேற்கு வங்க மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மேற்குவங்கத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, பா.ஜ.க., திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கின்றன. இதனால் அனைத்து மாநில மக்களும், இளைஞர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்டோரின் பார்வை மேற்கு வங்கம் பக்கம் திரும்பியுள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஐந்தாம் கட்டத் தேர்தலூக்கானப் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க.வின் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, பசிர்ஹத் தக்ஷின் என்ற பகுதியில் இன்று (11/04/2021) நடந்த தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நான் ராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா தொடர்ந்து கூறி வருகிறார். மக்கள் சொல்லும் போது நான் ராஜினாமா செய்கிறேன். மே- 2 ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தாவுக்கு மக்கள் சிறிய பிரியா விடைக்கொடுத்தால் நன்றாக இருக்குமா? பா.ஜ.க.வுக்கு 200 இடங்களை வழங்கி மம்தாவுக்கு மக்கள் பிரியா விடைக் கொடுக்க வேண்டும்" என்றார்.
மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட மற்றும் எட்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29- ஆம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மே 2- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகவுள்ளது.