ஜம்மு காஷ்மீரில் இம்மாத தொடக்கத்திலிருந்தே பொதுமக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் இதுவரை 11 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஐந்து பேர் வெளிமாநிலத்தவர் ஆவர். இதனால் ஜம்மு காஷ்மீரிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் உயிருக்குப் பயந்து வெளியேறி வருகின்றனர்.
அதேபோல் காவல்துறையினரும் புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாப்பு முகாம்களுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதற்கிடையே குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை ஒடுக்கப் பாதுகாப்புப் படையினர் களமிறங்கியுள்ளனர். இருவருக்குமிடையேயான மோதலில் இதுவரை சில தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். சில பாதுகாப்புப் படை வீரர்களும் வீர மரணமடைந்துள்ளார்.
இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் ஜம்மு காஷ்மீருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு அவர் பாதுகாப்பு சூழ்நிலையை ஆய்வு செய்வதுடன், ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநருடனும் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
நேற்று மாநில காவல்துறைத் தலைவர்களுடனும், மத்திய ஆயுதப்படை போலீஸ் தலைவர்களுடனும் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா, ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு, அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு மேற்கொள்ளவிருக்கும் முதல் பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.