போலி பாஸ்போர்ட்டில் குவைத் செல்ல முயன்றவர் கைது
போலி பாஸ்போர்ட்டில் குவைத் செல்ல முயன்ற ஆந்திரா வாலிபரை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியற்றை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த அலிபாஷா (30) என்ற பெயரில் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு கொழும்பு வழியாக குவைத் செல்வதற்காக ஒரு வாலிபர் வந்தார். அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, மற்றொருவர் பாஸ்போர்ட்டில் இவரது புகைப்படத்தை ஒட்டி வைத்து, போலி பாஸ்போர்ட் தயாரித்து இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அதிகாரிகள், அவரை தனி அறையில் வைத்து விசாரித்தனர். அதில், ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த சுப்பைய்யா (32) என்பது, தனது பெயரில் பாஸ்போர்ட் பெறாமல், ஏஜென்ட் மூலம், போலி பாஸ்போர்ட் பெற்று குவைத் செல்ல முயன்றது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள், அவருக்கு போலியாக பாஸ்போர்ட் தயார் செய்து கொடுத்தது ஆந்திர மாநில ஏஜென்ட்களா அல்லது சென்னை ஏஜென்ட்களா, போலி பாஸ்போர்ட்டில் செல்வதால் இவர் குற்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டவரா, தீவிரவாத அமைப்பில் தொடர்புடையவரா என மத்திய குற்றப்பிரிவு போலீசார், சுப்பையாவை கைது செய்து, தலைமை அலுவலகம் கொண்டு சென்று தீவிரமாக விசாரிக்கின்றனர்.