44 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தயாரிப்பதற்காக விடுக்கப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
16 பெட்டிகள் கொண்ட 44 அதிவேக வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தயாரிக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐசிஎப் சார்பில் டெண்டர் விடுக்கப்பட்டது. இதில் பெல் நிறுவனம், சாங்ரூர், எலெக்ட்ரோவேவ்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட், மேதா சர்வோ டிரைவஸ் பிரைவேட் லிமிட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி எடுப்பதற்காக போட்டியிட்டன. இதில் குருகிராம் நகரைச் சேர்ந்த பயோனீர் பில் நிறுவனத்துடன் இணைந்து சீனாவைச் சேர்ந்த சிஆர்ஆர்சி யாங்ஜி எலெக்ட்ரிக் கம்பெனி லிமிடெட் நிறுவனமும் முக்கிய போட்டியாளராக இருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு, 44 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தயாரிப்பதற்காக விடுக்கப்பட்டிருந்த டெண்டரை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மேக் இன் இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து திருத்தப்பட்ட கொள்முதல் விதிகள்படி, அடுத்த ஒரு வாரத்துக்குள் புதிய டெண்டர் விடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சீன எல்லைப்பிரச்சனையை தொடர்ந்து சீன நிறுவனங்களுக்கான வர்த்தக கொள்கைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதன் ஒரு பகுதியாக, சீன நிறுவனத்தின் பங்கேற்பை தடுக்கும் வகையிலேயே மத்திய அரசு இந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்திருப்பதாக கூறப்படுகிறது.