டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் மீது கடந்த 16ஆம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இதனையடுத்து, டெல்லி போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தாக்கப்பட்டதாக கூறும் ஸ்வாதி மாலிவால், பா.ஜ.க முகமாக இருக்கிறார் என்றும், பா.ஜ.கவின் சதி திட்டத்தின் அடிப்படையில்தான் அவர் பொய் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களான ராகுல்காந்தி, உத்தவ் தாக்கரே, சரத் பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்களுக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘கடந்த 18 வருடங்களாக களத்தில் பணியாற்றி, 9 ஆண்டுகளில் 1.7 லட்சம் வழக்குகளை மகளிர் ஆணையத்தில் விசாரித்துள்ளேன். யாருக்கும் பயப்படாமல், யாருக்கும் தலைவணங்காமல், மகளிர் ஆணையத்தை மிக உயரிய நிலையில் நிறுத்தியிருக்கிறேன். ஆனால், முதல்வர் வீட்டில் என்னை மோசமாகத் தாக்கியதும், பிறகு என் குணத்தை இழிவுபடுத்தியதும் மிகவும் வருத்தமாக உள்ளது.
முதல்வரின் உதவியாளர் தாக்கிய விவகாரத்தில் என்னுடைய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை. மேலும், அவர்கள் திட்டமிட்டு, என்னுடைய நடத்தை குறித்து விமர்சனம் செய்தனர். எனது குணாதிசயங்கள் மீதான இடைவிடாத தாக்குதல்களை நான் எதிர்கொண்டேன். கடந்த ஒரு மாதமாக, நீதிக்காகப் போராடும் போது எதிர்கொள்ளும் முதல் வலியை நான் சந்திக்கிறேன். இன்று இந்த விவகாரம் தொடர்பாக இந்தியக் கூட்டணியில் உள்ள அனைத்து பெரிய தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். நான் எல்லோருடனும் சந்திக்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.