நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் செய்யப்படும் சூழலில், இந்திய உச்சநீதிமன்றமும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 9 பேர் இதனால் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். ஏப்ரல் 15 வரையிலான அடுத்த 21 நாட்களுக்கு உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும், ஊரடங்கு காரணமாகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் நலனே முக்கியம் எனப் பிரதமர் மோடி அறிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து மற்ற அனைத்தும் முடக்கப்படும் என அறிவித்தார்.இந்நிலையில், இந்திய உச்சநீதிமன்றமும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உச்சநீதிமன்ற அறிக்கையில், "கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் 21 நாட்களுக்குப் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஆதலால் விசாரணைக்குத் திட்டமிடப்பட்டுப் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவால் ஒத்திவைக்கப்படுகிறது" என அறிவிக்கப்பட்டுள்ளது.