மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி, இன்று (11/09/2021) காலை சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல், தமிழ்நாட்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பாரதியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல், புதுச்சேரியில் பாரதி பூங்கா எதிரே உள்ள சிலைக்கு புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவுநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூகநீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவுகூருகிறோம்" என தெரிவித்திருந்தார்.
இதன்தொடர்ச்சியாக பிரதமர் மோடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய பாரதி பெயரில் தமிழ் ஆய்விருக்கை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.