ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பள்ளிவாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோஃபியான் மாவட்டத்தில் உள்ளது கனிபோரா கிராமம். இந்த கிராமத்தில் இன்று அதிகாலை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, தனியார் பள்ளிவாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது வாகனத்தை சுற்றிவளைத்த சில மர்ம நபர்கள், அதன்மீது சரமாரியாக கற்களை வீசத்தொடங்கினர்.
இந்தத் தாக்குதல் குறித்து பள்ளி வாகனத்தின் ஓட்டுநர், ‘பள்ளி வாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடப்பதை அறிந்ததும், முடிந்தளவுக்கு வேகமாக பேருந்தை இயக்கினேன். யாருக்கும் காயம்படக் கூடாது என எண்ணினேன். இருந்தும் ஒரு மாணவனுக்கு காயம் ஏற்பட்டது’ என தெரிவித்துள்ளார்.
காயம்பட்ட சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். அந்த சிறுவனின் தந்தை பேசுகையில், ‘கல்வீச்சுத் தாக்குதலில் என் மகன் காயம்பட்டிருக்கிறான். இது மனிதநேயத்திற்கு எதிரானது. இது எல்லா குழந்தைகளுக்கும் பொருந்தும். அவர்கள் அப்பாவிகள்; இது திரும்பவும் நடந்துவிடக் கூடாது’ என வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி உறுதியளித்துள்ளார்.