சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது இந்தியத் தண்டனை சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதியவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். அவர்களின் மரணத்திற்கு, அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, "தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் போலீஸார் காவலில் கொல்லப்பட்ட அதிர்ச்சி நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இருவரும் கொடூரமான முறையில் அடித்துத் துன்புறுத்தப்பட்டதன் விளைவாகவே இறந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302-ஆவது பிரிவின்கீழ் கொலைக் குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
கொல்லப்பட்டவர்கள் படுகாயமடைந்து இருந்தபோதிலும், அவர்களை ரிமாண்ட் செய்த நீதித்துறை நடுவரின் நடவடிக்கை, அருகிலேயே சிறை இருந்தும், அங்கே அடைக்காமல் வெகுதூரத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது. மருத்துவர்கள் அவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, சிறைக்கு அனுப்பியது மற்றும் சிறை அதிகாரிகள் அவர்களின் காயங்களைக் குறித்துக் கொள்ளாமல் அவர்களைச் சிறைக்குள் அனுமதித்திருப்பது முதலானவை குறித்து ஓர் உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.