Skip to main content

“2000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தம் மக்கள் கவனத்தை திசை திருப்பவே” - சித்தராமையா தாக்கு

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Siddaramaiah has condemned the demonetisation of Rs 2000 notes

 

நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து தற்போது 2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 

 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மேலும் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பாஜக அரசு தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இந்த நிலையில் அக்டோபர் முதல் 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வரும் நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, “பிரதமர் மோடியால் மீண்டுமொரு ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் கொள்கைகள் பற்றி அவர்களுக்கே தெளிவு இல்லை என்பது வருத்தமளிக்கிறது. 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்யும் திட்டம் இருந்தால் ஏன் அதனை அறிமுகப்படுத்தினார்கள்? பாஜகவின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த முயற்சி” என கடுமையாகச் சாடியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்