பா.ஜ.கவின் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்திடம் நேற்று (06-06-24) சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) பெண் கான்ஸ்டபிள் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத்தை அந்தப் பெண் கான்ஸ்டபிள் சரமாரியாக கன்னத்தில் தாக்கினார். மேலும் இது குறித்து விசாரணை நடத்த மூத்த சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய விவசாயிகளுக்கு எதிராக கங்கனா ரனாவத் பேசியிருந்ததால், பெண் காவலர் அவரை அறைந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இதையடுத்து, கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுரை தொழில் பாதுகாப்புப்படை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலருக்கு எதிராக சிஐஎஸ்எப் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவுத் எம்.பி இன்று (07-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கங்கனா ரனாவத் விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சிலர் ஓட்டு போடுகிறார்கள், சிலர் அறைகிறார்கள். நிஜத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. போராட்டத்தில் அவரது அம்மாவும் அமர்ந்திருந்ததாகப் பெண் காவலர் கூறியிருந்தால் அது உண்மைதான். விவசாயிகளின் போராட்டத்தில் அவரது தாயார் இருந்திருந்தால், அதற்கு எதிராக யாராவது ஏதாவது பேசினால், அது கோபத்தை உருவாக்கும்.
ஆனால், சட்டத்தின்படி ஆட்சி அமைய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினால், அந்த விஷயத்தை கையில் எடுக்கக் கூடாது. விவசாயிகளின் போராட்டத்தில், ஈடுபட்டவர்கள் இந்தியாவின் மகன்கள் மற்றும் மகள்கள். பாரத மாதாவை யாரேனும் அவமதித்தாலோ அல்லது யாரேனும் மனம் புண்பட்டாலோ அது சிந்திக்க வேண்டிய விஷயம்தான். கங்கனா மீது எனக்கு அனுதாபம் உண்டு. அவர் இப்போது எம்.பி. ஒரு எம்பி தாக்கப்படக்கூடாது. அதே சமயம் விவசாயிகளையும் மதிக்க வேண்டும்” என்று கூறினார்.
முன்னதாக கங்கனா ரனாவத்தை தாக்கியது குறித்து பெண் காவலர் குல்விந்தர் கவுர் கூறிய வீடியோவில், ‘100 ரூபாய்க்காக விவசாயிகள் போராட்டத்தில் உட்கார்ந்து இருக்காங்க என்று கங்கனா ரனாவத் கூறியிருந்தார். அவரால், அங்கே சென்று அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உட்கார முடியுமா?. கங்கனா இந்தக் கருத்தை சொல்லும் போது, அந்தப் போராட்டத்தில் என் அம்மாவும் கலந்துகொண்டு போராட்டம் நடத்தினார்’ என்று ஆவேசமாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.