முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ் நாடு அரசு குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை திட்டத்தின் மூலம், மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து கர்நாடகா, சத்தீஸ்கர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தை பின்பற்றி பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் ‘மஹாதாரி வந்தன் யோஜனா’ என்ற பெயரில் இந்த திட்டத்தைச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பெண்களின் வங்கிக்கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கு விவரங்களை ஆயுவு செய்த போது, பயனாளியின் பெயர் சன்னி லியோன் என்றும் கணவர் பெயர் ஜானி சின்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்த போது, அதே ஊரைச் சேர்ந்த விரேந்திர ஜோஷி என்பவர் ஆன்லைனில் சன்னி லியோனின் பெயரை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் இந்த மோசடி செய்து கடந்த 10 மாதங்களாக மகளிர் உரிமை தொகையின் மூலம் மாதம் ரூ.1000 பணம் பெற்று வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் இதுகுறித்து விசாரித்து வீரேந்திர ஜோஷி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.