மகாராஷ்டிரா மாநிலம் யவத்மல் மாவட்டத்தின் கிராமம் ஒன்றின் ஆரம்ப சுகாதார நிலையத்தில், சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 12 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக சானிடைசர் வழங்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொட்டு மருந்து வழங்குகையில் கவனக்குறைவாக போலியோ மருந்துக்குப் பதிலாக, அருகிலிருந்த சானிடைசர் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சானிடைசர் தரப்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்தக் குழந்தைகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் உடல்நலன் சீராக இருப்பதாகவும், தொடர்ந்து உடல்நிலை மேம்பட்டு வருவதாகவும் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார். மேலும் சானிடைசரில் 70 சதவீதம் ஆல்கஹால் கலந்திருப்பதால், அது குழந்தைகளுக்கு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்றும், இதானால் குழந்தைகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதில் மருத்துவப் பணியாளர்கள் கவனக்குறைவாக இருந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.