![Rules of election conduct!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZiqPdj3MDeq9KGLBfAiNhUcMyXwaSRqz5YEjaNR6VRo/1710587755/sites/default/files/inline-images/elec-ni_4.jpg)
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சந்து ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். அதே நேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதி பற்றி முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (16/03/2024) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. 'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள், மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 50% வாக்குச் சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்கள் படங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள் மற்றும் கட்சி பேனர்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.