ரெயில் பயணிகளிடம் ரூ.1 கோடி கொள்ளை: சிக்கிய திருடன்
பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரை சேர்ந்தவன் குல்பீர் சிங் (வயது 43). பிரீமியம் ரெயில் பயணிகளை குறி வைத்து செயல்பட்டு அவர்களிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி விடுவான். இதுவரை சிங் கொள்ளையடித்த பொருட்கள் மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.1 கோடி. பல முறை வெற்றியுடன் கொள்ளையடித்து வந்த சிங் சட்ட அமலாக்க துறையிடம் சிக்கி கொண்டுள்ளான்.
ரெயிலில் கொள்ளையடிப்பதற்காக சிங் தனது பெயரை குல்பீர் சிங், ஹேப்பி சிங், கே சிங் என மாற்றி கொண்டு டிக்கெட்டுகளை பதிவு செய்துள்ளான். சில நேரங்களில் தாடி வளர்த்து கொண்டும், அதனை ஷேவ் செய்து கொண்டும், தலைப்பாகை அணிந்து கொண்டும், அதனை எடுத்து விட்டும் என தனது தோற்றத்தினை பலமுறை மாற்றி இருக்கிறான்.
ரெயில் ஊழியர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது என்பதற்காக தனது தோற்றத்தினை சிங் மாற்றியுள்ளான். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுடன் பயணிக்கும் சிங், சக பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் அல்லது டாய்லெட்டுக்கு செல்லும்பொழுது அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்து விடுவான்.
இதற்கு முன் ரெயில்களில் கொள்ளையில் ஈடுபட்டதற்காக லூதியானா, ஜம்மு மற்றும் ஜான்சி நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சிங் ஜாமீனில் வெளிவந்துள்ளான். சிங் மேற்கொண்ட சில நடவடிக்கைகளை வைத்து அவனை பிடித்து விட்டோம் என போலீசார் கூறுகின்றனர். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சிங்கிற்கு ஒரு வாரம் போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.