‘ரோஹிங்யாக்களை வெளியேற்றக் கூடாது!’- மோடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ரோகிங்யா முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டாம் என மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ரோகிங்யா கிளர்ச்சியாளர்கள் அமைப்பு அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரின் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து மியான்மர் நாட்டின் பாதுகாப்புப் படையினர் ரோஹிங்யா முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதிலிருந்து தற்காத்துக்கொள்ள அந்த மக்கள் அண்டைநாடுகளின் எல்லைகளை நோக்கி தப்பியோடி தஞ்சம் புகுந்தனர். இதுவரை ஐந்து லட்சம் மக்கள் வங்காளதேசத்தின் எல்லைகளுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற தாக்குதல்களால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்யாக்கள் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர். அவர்களை தேச பாதுகாப்பு காரணங்களால் வெளியேற்ற வேண்டுமென மத்திய அரசு முடிவெடுத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தேச பாதுகாப்பு என்ற காரணியை இரண்டாம்பட்சமாக வைக்கமுடியாதுதான் என்றாலும், மனித உரிமைகளின் அடிப்படையில் ரோஹிங்யாக்களை வெளியேற்றுவது சரியாக இருக்காது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும்வரையில் ரோஹிங்யாக்களை வெளியேற்றக்கூடாது. ரோஹிங்யாக்கள் அகதிகள் என்றாலும், அவர்களுக்கும் மனித உரிமைகள் செல்லும் என்பதை அரசு கருத்தில் கொள்ளவேண்டும் என தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தது.