புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இந்த இட ஒதுக்கீட்டு சட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறிய பிறகு, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்கி உள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ரேபரெலி மக்களவை உறுப்பினருமான சோனியா காந்தி கலந்து பேசுகையில், “மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்கனவே நிறைவேற்றியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றிய மசோதா போன்று இந்த மசோதா இல்லை. குழந்தைகளை பெறுவதோடு மட்டுமல்லாமல் அவர்களை வளர்த்தெடுப்பவர்கள் பெண்கள். எனவே பெண்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தே ஆக வேண்டும். சுதந்திர போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பங்களித்தவர்கள் பெண்கள். மகளிர் இட ஒதுக்கீடு என்பது ராஜீவ் காந்தியின் கனவாக இருந்தது. உள்ளாட்சி மன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் நிறைவேற்றியவர் ராஜீவ் காந்தி. இந்திய வரலாற்றில் இந்திரா காந்தியின் பங்களிப்பு முக்கியமானது” என தெரிவித்தார். அதே சமயம் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.