உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது போல் கர்நாடக மாநிலத்திலும் பாஜக ராமர் கோவில் கட்ட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான துவக்க விழாவில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது, “மக்களிடம் வாக்குகளைப் பெற ராமர் கோயில் கட்டுவதை பாஜக தேர்தல் பிரச்சனையாக மாற்ற முயல்கிறது. உ.பி முதல்வரை அழைப்பதற்குப் பதில் கர்நாடக மடாலய தலைவர்களின் மூலம் கோவிலில் அடிக்கல் நாட்டப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் கூறுகையில், “அயோத்தி ராமர் கோயில் போன்று கர்நாடகாவிலும் கட்டப்படும். கோவில் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து அடுத்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் பாஜக தனது ஆட்சியைத் தக்கவைக்க இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.