கடந்த வாரம் ஹைதரபாத்தில் 25 வயதுடைய கால்நடை மருத்துவர் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் பலரும் இந்த பிரச்சனை குறித்து பேசினர்.
இந்நிலையில், கேள்வி நேரத்தின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ''ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரைப் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தது நாடு முழுவதும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவர்கள் செய்த குற்றத்திற்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் அகற்றவும், முழு சபையும் ஒப்புக் கொள்ளும் மாதிரியான சட்டத்தை உருவாக்க நாங்கள் தயாராக உள்ளோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.