
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமைப் பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) எனும் பெயரில் இந்தியா முழுவதும் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் தொடங்கிய தேச ஒற்றுமைக்கான நடைபயணம் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைக் கடந்து வந்த நிலையில், தற்போது டெல்லியை அடைந்துள்ளது.
இதனிடையே, டெல்லியில் நடந்த இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ராகுல்காந்தி பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார், பல்வேறு சமயங்களில் ராகுல்காந்தியின் தரப்பிலிருந்து பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டுதல் நடைமுறைகள் மீறப்பட்டது என மத்திய ரிசர்வ் படை அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “மத்தியில் ஆளும் பாஜக அரசு காரணம் ஏதுமில்லாமல் ஒற்றுமைப் பயணத்தின் போது நான் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிவிட்டதாக வழக்கு தொடர முயற்சி செய்கிறது. நான் யாத்திரையின் போது குண்டு துளைக்காத வண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்கிறது உள்துறை அமைச்சகம். மக்களிடம் நேரடியாகச் சென்று பேச விரும்புவதால், குண்டு துளைக்காத காரில் செல்ல முடியாது. இந்திய ஒற்றுமைப் பயணத்தை விமர்சித்து கவனம் பெற வைத்த பாஜக ஆர்.எஸ்.எஸ்க்கு நன்றி. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை வீழ்த்த முடியும். நாட்டில் பாஜகவுக்கு மிகப்பெரிய எதிர்ப்பலை உள்ளது. பாஜகவுக்கு எதிரான மாற்றுப்பார்வையில் உள்ள வலிமையாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" என்று தெரிவித்தார்.