காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், விவசாயிகள் போராட்டம் நாட்டிற்கு நல்லதல்ல என்றும் பணத்தை 5 முதல் 10 நபர்களின் பையில் அரசு வைத்துள்ளது என்றும் பட்ஜெட் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். மேலும் பாதுகாப்பிற்குச் செலவிடும் தொகை பெரிய அளவில் அதிகரிக்கப்படாதது குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி, "விவசாயிகளின் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படவேண்டியது என நான் நம்புகிறேன். விவசாயிகள் கோரிக்கையை விட்டு விலகவில்லை. எனவே அரசு அவர்களுக்கு செவி சாய்க்க வேண்டும். டெல்லி விவசாயிகளால் சூழப்பட்டுள்ளது. அவர்கள் தான் நமக்கு வாழ்வாதாரம் தருகிறார்கள். டெல்லி ஏன் கோட்டையாக மாற்றப்படுகிறது? நாம் ஏன் அவர்களை அச்சுறுத்துகிறோம், அடித்துக் கொலை செய்கிறோம்? அரசு ஏன் அவர்களுடன் பேசவில்லை, இந்தச் சிக்கலை தீர்க்கவில்லை? இந்தப் பிரச்சினை நாட்டுக்கு நல்லதல்ல எனக் கூறியுள்ளார்.
பட்ஜெட் தொடர்பாக அவர், "இந்தியா தனது மக்களின் கைகளில் பணத்தை கொடுக்கவேண்டும். ஏனென்றால், நமது பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்ய விரும்பினால், அது நுகர்வு மூலமாக மட்டுமே நடக்கும். விநியோக பக்கத்திலிருந்து இது சாத்தியமில்லை. இந்தியாவின் 99% மக்கள்தொகைக்கு அரசு ஆதரவு வழங்கும் என்று நான் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்தேன். ஆனால் இந்த பட்ஜெட் 1% மக்கள் தொகைக்கு மட்டுமே ஆதரவாக உள்ளது. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரிடமிருந்தும், தொழிலாளர்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும், ராணுவப் படைகளிடமிருந்தும் நீங்கள் பணத்தைப் பறித்து 5-10 பேரின் பைகளில் வைத்துள்ளீர்கள்" என மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், "சீனா இந்தியாவுக்குள் நுழைந்து நமது நிலத்தை அபகரிக்கிறது. நாம் நமது பாதுகாப்புச் செலவை அதிகரிக்கவில்லை என்றால், நீங்கள் அவர்களுக்கு என்ன செய்தியைத் தருகிறீர்கள்? நீங்கள் பாதுகாப்புச் செலவை ரூ.3000 கோடி முதல் 4000 கோடி வரை உயர்த்தியுள்ளீர்கள். நீங்கள் இதன்மூலம் என்ன செய்தியைத் தந்தீர்கள்?. நீங்கள் இந்தியாவிற்குள் நுழைந்து, நீங்கள் விரும்பியதைச் செய்ய முடியும், நாங்கள் எங்கள் பாதுகாப்புப் படைகளை ஆதரிக்கமாட்டோம் என்றா?" என ராகுல் காந்தி மத்திய அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.