ஹரியானா மாநிலத்தில், வரும் அக்டோபர் 5ஆம் தேதியன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள், அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. மொத்தம் 90 தொகுதிகள் உள்ள ஹரியானா மாநிலத்தை நயாப் சிங் சனி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம் பா.ஜ.கவை வீழ்த்தும் வகையில் காங்கிரஸ் கட்சியும் காய் நகர்த்தி வருகிறது. தேசிய அளவில், இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும், ஹரியானா மாநிலச் சட்டசபைத் தேர்தலில் தனித்தனியே களம் காண்கின்றன. இந்த தேர்தலை முன்னிட்டு, பல்வேறு கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஹரியானா பகதூர்கர் நகரில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “அம்பானியின் திருமணத்தைப் பார்த்தீர்களா? அம்பானி தனது மகனின் திருமணத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்தார் தெரியுமா? அது யாருடைய பணம்? அது உங்கள் பணம். உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை. குழந்தைகளின் திருமணத்திற்கு வங்கிக் கடன் வாங்க வேண்டும்.
இந்தியாவில் 25 பேரின் திருமணத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்யும் முறையை நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார். ஆனால், ஒரு விவசாயி கடனில் மூழ்கி மட்டுமே திருமணத்தை நடத்த முடியும். இது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் இல்லை என்றால், அது என்ன? உண்மை என்னவென்றால், உங்கள் பாக்கெட்டிலிருந்து பணம் எடுக்கும்போது இந்த 25 பேரின் பாக்கெட்டுக்குள் பணம் செல்கிறது. அக்னிபாத் போன்ற திட்டங்கள் ஓய்வூதியம், கேன்டீன் மற்றும் இந்திய வீரர்களிடமிருந்து தியாகி அந்தஸ்தை பறிக்க தொடங்கப்பட்டதாகும். முன்பெல்லாம் அரசு நிறுவனங்கள் இருந்தன. ஆனால், இப்போது அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு பட்ஜெட்டை, அதானி டிஃபென்ஸ் நிறுவனத்திற்கு வழங்குவதே முக்கிய நோக்கம்” என்று கூறினார்.