பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி ஆட்சேபனைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார். இது தொடர்பாக ராகுல்காந்திக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா என்பவரும் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சுல்தான்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுபம் வர்மா அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து 12 முறை விலக்கு கேட்டிருந்தார். மேலும் கடந்த முறை வழக்கு விசாரணையின் போது ராகுல் காந்தி தரப்பில், “நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். எனவே ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி இந்த வழக்கில் ஜூலை 26ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என நீதிபதி சுபம் வர்மா உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (26.07.2024) நேரில் ஆஜரானர். இதனையடுத்து இந்த வழக்கு ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.