பிரான்சிலிருந்து வாங்கப்பட்ட ஐந்து ரஃபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய விமானப்படையில் சேர்க்கப்படவுள்ளன.
பிரான்ஸிடம் இருந்து சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பில், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து, அண்மையில் இறுதிசெய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, மே மாதம் இந்தியாவிற்கு ஐந்து ரஃபேல் விமானங்களை வழங்க பிரான்ஸ் உறுதி அளித்திருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட முடக்கம் காரணமாக ஏற்பட்ட தாமதத்தால், ஜூலை மாதம் தான் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில் இந்தியா வந்தடைந்துள்ள ஐந்து ரஃபேல் விமானங்கள், வரும் செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய விமானப்படையில் சேர்க்கப்படவுள்ளன. செப்டம்பர் 4 முதல் 6 வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்தியா திரும்பியதும், இதற்கான விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.