ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த குவாடன் எனும் ஒன்பது வயது சிறுவன் குள்ளமான உடல் தோற்றத்தை கொண்டிருப்பதால், அந்த சிறுவனுடன் படிக்கும் மாணவர்கள் அந்த சிறுவனை கேலி செய்த நிலையில், அந்த சிறுவன் இதுகுறித்து தனது தாயிடம் கதறி அழுத்த வீடியோ இணையத்தில் பரவி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் அழுதபடியே பேசிய அந்த சிறுவன், "எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் அம்மா. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். எனது இதயத்தில் கத்தியால் குத்திக்கொள்ள விரும்புகிறேன். என்னை யாராவது கொன்றுவிட வேண்டும் என விரும்புகிறேன்" எனக்கூறி கட்டுப்படுத்த முடியாமல் அழுதுள்ளான்.
இந்த விடியோவை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த அந்த சிறுவனின் தாய், "ஒரு தாயாக எனது பொறுப்பிலிருந்து நான் தவறிவிட்டதாக கருதுகிறேன். நமது கல்வித் திட்டமும் தோல்வி அடைந்துவிட்டதாகவே கருதுகிறேன். சக மாணவர்களை கேலி செய்வதால் எத்தகைய விளைவு ஏற்படும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். குவாடனின் உயரத்தை கேலி செய்து அவன் தலையில் ஒரு மாணவன் அடிப்பதை நானே நேரில் பார்த்தேன். ஆனால் பள்ளியில் புகார் செய்து பிரச்சனை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக காரில் ஓடிவந்து ஏறிய அவன், தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கிவிட்டான்" என தெரிவித்தார்.
இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிறுவனுக்கு உதவும் வகையில் உலகம் முழுவதிலுமிருந்து நிதியுதவிகள் குவிந்தன. 3,00,000 டாலர்களுக்கு மேல் நிதி திரண்ட சூழலில், தனது மகனுக்காக கிடைத்த நிதியை அறக்கட்டளைக்கு வழங்குவதாக அந்த சிறுவனின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். நிதியைக் காட்டிலும் இந்த விஷயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தங்களுக்கு தேவை என அந்த சிறுவன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த முடிவு பல்வேறு தரப்பிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.