தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்புக்கூறு துணைத் திட்ட நிதியை முழுமையாக செலவிடாத புதுச்சேரி அரசைக் கண்டித்தும், 2021- ஆம் ஆண்டுக்கான சிறப்புக்கூறு நிதியை முழுமையாக செலவிட வேண்டும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என்பது சென்டாக்கில் தேர்வான மாணவர்கள் மட்டுமே என்று பாரபட்சம் காட்டக் கூடாது, நிதியை முழுமையாக செலவிடாத அதிகாரி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
சுமார் 50- க்கும் மேற்பட்டோர் அண்ணா சிலையில் இருந்து பேரணியாக சென்று சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் சட்டப்பேரவை அருகே தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது போராட்டகாரர்கள் தடுப்புகள் மீது ஏரியும், தடுப்புகளைத் தூக்கி எறிந்தும் சட்டப்பேரவை நோக்கி சென்றனர். இதனால் காவல்துறையினருக்கும், போராட்டக்கார்களுக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் இருந்து காவல்துறையினரை மீறி சென்ற ஒரு சிலர் சட்டப்பேரவை நுழைவு வாயில் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையறிந்த சட்டப்பேரவை காவலர்கள் சட்டப்பேரவை வாயில் கதவை இழுத்து மூடினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.