புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (14/04/2020) மாலை காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்குத் தொலைகாட்சி மூலம் ஆற்றிய உரையில், கரோனா தொற்று தாக்கத்தைத் தடுக்க நாடு முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார். 'ஏப்ரல் 20- ஆம் தேதி வரை விதிகள் கடுமையாகப் பின்பற்றப்படும், மக்கள் தனிமையில் இருக்க வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்' எனப் பல்வேறு விதிமுறைகளையும் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதை நாம் கடைப்பிடிப்போம். மத்திய அரசு அறிவிப்புக்குப்பின், தொழிற்சாலைகள், மற்ற நிறுவனங்களுக்கான தளர்வுகளை அறிவிப்போம்.
கட்டுப்பாடுகளினால் சிரமம் இருந்தாலும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மே 3- ஆம் தேதி வரை விழிப்புடன், தனித்திருக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி வெளியில் செல்ல வேண்டும். அப்படி இருந்தால்தான் புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவாமல் காக்க முடியும்.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் புதுச்சேரி மக்களுக்கு 5 கிலோ அரிசி விநியோகம் செய்வதில் மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. இது சம்மந்தமாக முதல்வர், அமைச்சர்களிடம் கலந்து பேசாமல் அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு அரசுப் பேருந்துகளைக் கொண்டு அரிசியை விநியோகிக்க முயற்சித்தனர். அப்படி செய்தால் பல நாட்களாகும். எனவே தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி லாரிகள் மூலம் அரிசியை ஏற்றிச் சென்று, ஒரு வாரத்துக்குள் சிவப்பு அட்டைதாரர்களுக்கு அரிசியைக் கொடுத்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்.
அதே போல மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்களின் கஷ்டத்தை உணர்ந்து அதிகாரிகள், பணியாளர்கள் வேகமாகச் செயல்பட வேண்டும். குறிப்பாக ரேஷன் கடை ஊழியர்கள் வேலை செய்யத் தயாராக இருந்தாலும், நிர்வாகத்தில் உள்ள முட்டுகட்டைகள் காரணமாக எங்களால் செயல்படுத்த முடியவில்லை.
கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட அரியாங்குப்பம், சொர்ணா நகர் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இன்றுடன் (14/04/2020) நிறைவடைவதால் அப்பகுதிகளில் இன்று முதல் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்படும். கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய வாழ்வாதாரத்தைக் காக்க எங்களால் முடிந்தவரை உதவி செய்து வருகிறோம். மத்திய அரசு நிதி கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்." இவ்வாறு புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார்.