பினாமி சொத்து விவரத்தின் தகவல் அளித்தால் 1 கோடி பரிசு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் சிலர் கறுப்புப் பணத்தை மறைக்கும் விதமாக தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதனை பிரித்து அளித்து விடுகின்றனர். இதனால் பினாமி சொத்துக்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில், இதுபோன்ற பினாமி சொத்து விவரங்கள் தொடர்பான சரியான தகவல்கள் அளித்தால் அவருக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நேரடி வரிவிதிப்பு ஆணையரகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இதுபோன்ற தகவல்கள் அளிப்பவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். பினாமி சொத்து தொடர்பான சட்டத்தில் தற்போது இந்த புதிய நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பினாமி சொத்து விவரங்களை அளித்தால் அவருக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படும். இந்த நடைமுறை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் புலனாய்வு இயக்குநகரங்களில் இருந்து வந்தது. தற்போது இதிலும் பின்பற்றப்படவுள்ளது. இருந்தாலும் இந்தப் பரிசுத்தொகை சற்று குறைவுதான் என்றார். முன்னதாக, பினாமி சொத்து தடுப்பு நடவடிக்கைச் சட்டம் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் பல பினாமி சொத்துக்கள் மீதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.